லூவனில் புது வெள்ளை மழை

சில நாட்களுக்கு முன்பு, எனது பல்கலைக்கழகத்தின் ‘Metallurgy and Materials Engineering (MTM)’ எனும் பிரிவின் வருடத்தில் இரு முறை பதிவாகும் செய்தி இதழில், நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதை இங்கு தமிழாக்கம் செய்து பதிவு செய்யலாம் என்று நினைத்தேன். நான் இப்பொழுது வசிக்கும் இடம் லூவன் என்ற நகரம். இது பெல்ஜியம் எனும் தேசத்தில் உள்ளது. பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸ்ஸல்ஸிற்கு  இங்கிருந்து இருபது நிமிடங்களில் ரயிலில் செல்ல முடியும். நான் முதல் முறையாக என் வாழ்க்கையில் ‘snow’ பொழியும்பொழுது எப்படி இருக்கும் என்பதைக்கடந்த குளிர்காலத்தில் தான் அனுபவித்தேன். இந்த கட்டுரை அந்த முதல் அனுபவம் பற்றி தான்.

இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது அந்த நாள் – பதினேழாம் தேதி டிசம்பர், 2009 – லூவன் தன் குளிர்காலத்தின் முதல் snowவைக்கண்டது, நான் என் வாழ்கையின் முதல் snowவைக்கண்டு களித்தேன். எனது சொந்த ஊரிலோ (சென்னை) வெயில் கொளுத்தித்தள்ளும் சதா சர்வ காலம். அதனால் அந்த முதல் காட்சி என்னை பிரமிக்க வைத்தது.

இலைகளின் மேல் பூத்திருக்கும் பனித்துளிகள், வாத்துகள் நீராடும் குளங்கள் ஐஸ் கட்டியாய் மாறியது – இக்காட்சிகளை நான் டிசம்பர் ஆரம்பத்திலிருந்து தினமும் என் வீட்டிலிருந்து MTM செல்லும் வழியில் சிறிது நேரம் நின்று பார்த்து பரவசம் அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த பதினேழாம் தேதி பொழிந்த snow வை நான் எதிர்பார்க்கவேயில்லை. லூவன் முழுவதும் பளிச் என்ற ஒரு வெள்ளை மெத்தையை விரித்தது போல் காட்சி அளித்தது. பகலில் சுமார் பனிரண்டு மணிக்கு பஞ்சு போல் பறக்கத்தொடங்கிய அந்த snow துளிகள், கொஞ்சம் கொஞ்சமாக தனது சக்தியை வெளிப்படுத்தி, இரவு நேரத்தில் பெரிய கட்டிகளாக விழுந்தது. இதனால் அன்று பெல்ஜியம் மிக மோசமான ட்ராபிக் ஜாமைக்கண்டது.

‘MTM’ யில் இருந்து அன்று நான் தயக்கத்துடன் வீட்டிற்கு மெதுவாக நடக்கத்தொடங்கினேன். ரோட்டில் வாகனங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நின்று கொண்டிருந்தன. ஆனால் எனக்கு அந்த snow வின் அழகு மட்டும் தான் தென்பட்டது. அந்த பஞ்சு போல் இருந்த snow வைத்தொட்டு பார்க்க வேண்டும் என என் மனம் துள்ளியது. அதன் மேன்மையை முழுதாக அனுபவிப்பதற்கு முன், பெல்ஜியத்தில் கிடைக்கும் சாக்லேட்டுகள் எப்படி நம் வாயில் கரைந்து போகுமோ, அது போலவே இதுவும் என் கையில் கரைந்தது. நான் வீட்டிற்கு செல்லும் வழியில் பல அற்புதமான காட்சிகளைக்கண்டேன்; என் மொபைல் தொலைபேசியில் தொடர்ந்து படம் பிடித்தேன். ஆரென்பர்க் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றம், snow வை இலைகளாகக்கொண்ட மரங்கள், ஒரு வீட்டு வெளியே இருந்த கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு அழகூட்டிய snow – இப்படி பல அழகான ஓவியம்போல் தென்படும் காட்சிகளை அந்த முப்பது நிமிடங்களில் கண்டேன். ஆனால் என் மனம் குளிரவில்லை. தாகம் தீரவில்லை. அதனால் ஒரு தொழியுடன் வெளியே சாப்பிடச்சென்றேன். ரோட்டில் snow சில இடங்களில் கரையத்தொடங்கியது. நடப்பது கடினமாக இருந்தது. நல்ல வேளை வழுக்கி விழவில்லை. முதலில் பறக்கும் snow வாக இருந்தது, இரவில் தலையில் ‘தொம்’ என்று விழும் snow ஆகி விட்டது.

snow வைபார்க்கும் பொழுது எனக்கு மழை நினைவு வந்தது. நீரின் அடர்த்தி ஐஸைவிட அதிகமானதால் ஐஸ் கட்டிகளை நாம் பறக்கும் வடிவத்தில் காணலாம் ஆனால் மழை நீர் துளிகள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவைகளை பூமியில் விழும் முன் மேலும் கீழும் பறந்து கொண்டு காண இயலாது. நம் ஊரில் மழை பெய்தால் குழந்தைகள் காகித படகுகள் செய்து தண்ணீரில் மிதக்க விட்டு விளையாடுவார்கள். இங்கோ snow பொழிந்த பிறகு கரையாமல் இருக்கும் snow வை  வைத்து ஸ்னோமேன் செய்கிறார்கள் குழந்தைகள். ஆரேன்பர்க் அரண்மனையின் முன் இருக்கும் பச்சைப்பசேல் புல்வெளி வெள்ளை வெளேர் என்று மாறி விட்டது. அங்கு நிறைய ஸ்னோமேன்களைக் குழந்தைகள் செய்திருந்தார்கள்.

அந்த முதல் snow வை அனுபவித்த பிறகு, இன்னும் பல முறை அதைப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு முறையும் மிகவும் ரசித்தேன். சில சமயம் அது அழுக்காகி ஐஸ் கட்டியாய் மாறும் சமயத்தில் மறுபடியும் அந்த மென்மையான புது வெள்ளை மழை பொழிந்து தன் அழகை மீண்டும் வெளிப்படுத்தும்.

அடுத்த குளிர் காலத்திலும் நிறைய snow பொழிய வேண்டும் என வேண்டுகிறேன். லூவனுடைய அந்த மாயமான தோற்றம் மீண்டும் தென்படட்டும்!

Advertisements